சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian  
பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்

Back to Top
சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
12.400   பொய்யடிமை யில்லாத புலவர்  
பண் -   (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )

12.400 பொய்யடிமை யில்லாத புலவர்   ( )
செய்யுள்நிகழ் சொல்தெளிவும்
செவ்வியநூல் பலநோக்கும்
மெய்யுணர்வின் பயனிதுவே
எனத்துணிந்து விளங்கியொளிர்
மையணியுங் கண்டத்தார்
மலரடிக்கே ஆளானார்
பொய்யடிமை யில்லாத புலவர்எனப் புகழ்மிக்கார்.
[1]
பொற்பமைந்த அரவாரும்
புரிசடையார் தமையல்லால்
சொற்பதங்கள் வாய்திறவாத்
தொண்டுநெறி தலைநின்ற
பெற்றியினில் மெய்யடிமை
யுடையாராம் பெரும்புலவர்
[2]
ஆங்கவர்தம் அடியிணைகள்
தலைமேற்கொண் டவனியெலாம்
தாங்கியவெண் குடைவளவர்
குலஞ்செய்த தவம்அனையார்
ஓங்கிவளர் திருத்தொண்டின்
உண்மையுணர் செயல்புரிந்த
பூங்கழலார் புகழ்ச்சோழர்
திருத்தொண்டு புகல்கின்றாம்.
[3]

Back to Top
சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
12.410   புகழ்ச் சோழ நாயனார்  
பண் -   (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
குலகிரியின் கொடுமுடிமேல்
கொடிவேங்கைக் குறியெழுதி
நிலவுதரு மதிக்குடைக்கீழ்
நெடுநிலங்காத் தினிதளிக்கும்
மலர்புகழ்வண் தமிழ்ச்சோழர்
வளநாட்டு மாமூதூர்
உலகில்வளர் அணிக்கெல்லாம்
உள்ளுறையூ ராம்உறையூர்.
[1]
அளவில்பெரும் புகழ்நகரம்
அதனில்அணி மணிவிளக்கும்
இளவெயிலின் சுடர்ப்படலை
இரவொழிய எறிப்பனவாய்க்
கிளரொளிசேர் நெடுவானப்
பேர்யாற்றுக் கொடிகெழுவும்
வளரொளிமா ளிகைநிரைகள்
மருங்குடைய மறுகெல்லாம்.
[2]
நாகதலத் தும்பிலத்தும்
நானிலத்தும் நலஞ்சிறந்த
போகமனைத் தினுக்குறுப்பாம்
பொருவிறந்த வளத்தினவாய்
மாகம்நிறைந் திடமலிந்த
வரம்பில்பல பொருள்பிறங்கும்
ஆகரமொத் துளஅளவில்
ஆவணவீ திகளெல்லாம்.
[3]
பார்நனைய மதம்பொழிந்து
பனிவிசும்பு கொளமுழங்கும்
போர்முகவெங் கறையடியும்
புடையினம்என் றடையவரும்
சோர்மழையின் விடுமதத்துச்
சுடரும்நெடு மின்னோடைக்
கார்முகிலும் பலதெரியா
களிற்றுநிரைக் களமெல்லாம்.
[4]
படுமணியும் பரிச்செருக்கும்
ஒலிகிளரப் பயில்புரவி
நெடுநிரைமுன் புல்லுண்வாய்
நீர்த்தரங்க நுரைநிவப்ப
விடுசுடர்மெய் யுறையடுக்கல்
முகில்படிய விளங்குதலால்
தொடுகடல்கள் அனையபல
துரங்கசா லைகளெல்லாம்.
[5]
துளைக்கைஅயிரா வதக்களிறும்
துரங்கஅர சுந்திருவும்
விளைத்தஅமு துந்தருவும்
விழுமணியுங் கொடுபோத
உளைத்தகடல் இவற்றொன்று
பெறவேண்டி உம்பரூர்
வளைத்ததுபோன் றுஉளதங்கண்
மதில்சூழ்ந்த மலர்க்கிடங்கு.
[6]
காரேறுங் கோபுரங்கள்
கதிரேறும் மலர்ச்சோலை
தேரேறும் மணிவீதி
திசையேறும் வசையிலணி
வாரேறு முலைமடவார்
மருங்கேறு மலர்க்கணைஒண்
பாரேறும் புகழ்உறந்தைப்
பதியின்வளம் பகர்வரிதால்.
[7]
அந்நகரில் பாரளிக்கும்
அடலரச ராகின்றார்
மன்னுதிருத் தில்லைநகர்
மணிவீதி யணிவிளக்கும்
சென்னிநீ டநபாயன்
திருக்குலத்து வழிமுதலோர்
பொன்னிநதிப் புரவலனார்
புகழ்ச்சோழர் எனப்பொலிவார்.
[8]
ஒருகுடைக்கீழ் மண்மகளை
உரிமையினில் மணம்புணர்ந்து
பருவரைத்தோள் வென்றியினால்
பார்மன்னர் பணிகேட்ப
திருமலர்த்தும் பேருலகும்
[9]
பிறைவளரும் செஞ்சடையார்
பேணுசிவா லயமெல்லாம்
நிறைபெரும்பூ சனைவிளங்க
நீடுதிருத் தொண்டர்தமைக்
குறையிரந்து வேண்டுவன
குறிப்பின்வழி கொடுத்தருளி
முறைபுரிந்து திருநீற்று
முதல்நெறியே பாலிப்பார்.
[10]
அங்கண்இனி துறையுநாள்
அரசிறைஞ்ச வீற்றிருந்து
கொங்கரொடு குடபுலத்துக்
கோமன்னர் திறைகொணரத்
தங்கள் குல மரபின்முதல்
தனிநகராங் கருவூரின்
மங்கலநா ளரசுரிமைச்
சுற்றமுடன் வந்தணைந்தார்.
[11]
வந்துமணி மதிற்கருவூர்
மருங்கணைவார் வானவர்சூழ்
இந்திரன்வந் தமரர்புரி
எய்துவான் எனஎய்திச்
சிந்தைகளி கூர்ந்தரனார்
மகிழ்திருவா னிலைக்கோயில்
முந்துறவந் தணைந்திறைஞ்சி
மொய்யொளிமா ளிகைபுகுந்தார்.
[12]
மாளிகைமுன் அத்தாணி
மண்டபத்தில் மணிபுனைபொன்
கோளரிஆ சனத்திருந்து
குடபுலமன் னவர்கொணர்ந்த
ஓளிநெடுங் களிற்றின்அணி
உலப்பில்பரி துலைக்கனகம்
நீளிடைவில் விலகுமணி
முதனிறையுந் திறைகண்டார்.
[13]
திறைகொணர்ந்த அரசர்க்குச்
செயலுரிமைத் தொழிலருளி
முறைபுரியுந் தனித்திகிரி
முறைநில்லா முரண்அரசர்
உறையரணம் உளவாகில்
தெரிந்துரைப்பீர் எனவுணர்வு
நிறைமதிநீ டமைச்சர்க்கு
மொழிந்தயுளி நிகழுநாள்.
[14]
சென்றுசிவ காமியார்
கொணர்திருப்பள் ளித்தாமம்
அன்றுசித றுங்களிற்றை
அறஎறித்து பாகரையுங்
கொன்றஎறி பத்தர்எதிர்
என்னையுங்கொன் றருளுமென
வென்றிவடி வாள்கொடுத்துத்
திருத்தொண்டில் மிகச்சிறந்தார்.
[15]
விளங்குதிரு மதிக்குடைக்கீழ்
வீற்றிருந்து பாரளிக்கும்
துளங்கொளிநீண் முடியார்க்குத்
தொன்முறைமை நெறியமைச்சர்
அளந்ததிறை முறைகொணரா
அரசனுளன் ஒருவனென
உளங்கொள்ளும் வகையுரைப்ப
வுறுவியப்பால் முறுவலிப்பார்.
[16]
ஆங்கவன்யார் என்றருள
அதிகன்அவன் அணித்தாக
ஓங்கெயில்சூழ் மலையரணத்
துள்ளுறைவான் எனவுரைப்ப
ஈங்குநுமக் கெதிர்நிற்கும்
அரணுளதோ படையெழுந்தப்
பாங்கரணந் துகளாகப்
பற்றறுப்பீர் எனப்பகர்ந்தார்
[17]
அடல்வளவர்ஆணையினால்
அமைச்சர்களும் புறம்போந்து
கடலனைய நெடும்படையைக்
கைவகுத்து மேற்செல்வார்
படர்வனமும் நெடுங்கிரியும்
பயிலரணும் பொடியாக
மிடலுடைநாற் கருவியுற
வெஞ்சமரம் மிகவிளைத்தார்.
[18]
வளவனார் பெருஞ்சேனை
வஞ்சிமலர் மிலைந்தேற்ப
அளவில்அர ணக்குறும்பில்
அதிகர்கோன் அடற்படையும்
உளநிறைவெஞ் சினந்திருகி
யுயர்காஞ்சி மலைந்தேற்ப
கிளர்கடல்கள் இரண்டென்ன
இருபடையுங் கிடைத்தனவால்.
[19]
கயமொடு கயம்எதிர் குத்தின
அயமுடன் அயமுனை முட்டின
வயவரும் வயவரும் உற்றனர்
வியனமர் வியலிட மிக்கதே.
[20]
மலையொடு மலைகள் மலைந்தென
அலைமத அருவி கொழிப்பொடு
சிலையினர் விசையின் மிசைத்தெறு
கொலைமத கரிகொலை யுற்றவே.
[21]
சூறை மாருதம் ஒத்தெதிர்
ஏறு பாய்பரி வித்தகர்
வேறு வேறு தலைப்பெய்து
சீறி யாவி செகுத்தனர்.
[22]
மண்டு போரின் மலைப்பவர்
துண்ட மாயிட வுற்றுஎதிர்
கண்ட ராவி கழித்தனர்
உண்ட சோறு கழிக்கவே.
[23]
வீடி னாருட லிற்பொழி
நீடு வார்குரு திப்புனல்
ஓடும் யாறென வொத்தது
கோடு போல்வ பிணக்குவை.
[24]
வானி லாவு கருங்கொடி
மேனி லாவு பருந்தினம்
ஏனை நீள்கழு கின்குலம்
ஆன வூணொ டெழுந்தவே.
[25]
வரிவிற் கதைசக் கரமுற் கரம்வாள்
சுரிகைப் படைசத் திகழுக் கடைவேல்
எரிமுத் தலைகப் பணம்எல் பயில்கோல்
முரிவுற் றனதுற் றனமொய்க் களமே.
[26]
வடிவேல் அதிகன் படைமா ளவரைக்
கடிசூ ழரணக் கணவாய் நிரவிக்
கொடிமா மரில்நீ டுகுறும் பொறையூர்
முடிநே ரியனார் படைமுற் றியதே.
[27]
முற்றும் பொருசே னைமுனைத் தலையில்
கல்திண் புரிசைப் பதிகட் டழியப்
பற்றுந் துறைநொச் சிபரிந் துடையச்
சுற்றும் படைவீ ரர்துணித் தனரே.
[28]
மாறுற் றவிறற் படைவாள் அதிகன்
ஊறுற் றபெரும் படைநூ ழில்படப்
பாறுற் றஎயிற் பதிபற் றறவிட்டு
ஏறுற் றனன்ஓ டியிருஞ் சுரமே.
[29]
அதிகன் படைபோர் பொருதற் றதலைப்
பொதியின் குவையெண் ணிலபோ யினபின்
நிதியின் குவைமங் கையர்நீள் பரிமா
எதிருங் கரிபற் றினர்எண் ணிலரே.
[30]
அரண்முற் றியெறிந் தஅமைச் சர்கள் தாம்
இரணத் தொழில்விட் டெயில்சூழ் கருவூர்
முரணுற் றசிறப் பொடுமுன் னினர்நீள்
தரணித் தலைவன் கழல்சார் வுறவே.
[31]
மன்னுங் கருவூர் நகர்வா யிலின்வாய்
முன்வந் தகருந் தலைமொய்க் குவைதான்
மின்னுஞ் சுடர்மா முடிவேல் வளவன்
தன்முன் புகொணர்ந் தனர்தா னையுளோர்.
[32]
மண்ணுக் குயிராம் எனுமன் னவனார்
எண்ணிற் பெருகுந் தலையா வையினும்
நண்ணிக் கொணருந் தலையொன் றில்நடுக்
கண்ணுற் றதொர்புன் சடைகண் டனரே.
[33]
. கண்டபொழு தேநடுங்கி
மனங்கலங்கிக் கைதொழுது
கொண்டபெரும் பயத்துடன்
குறித்தெதிர்சென் றதுகொணர்ந்த
திண்டிறலோன் கைத்தலையிற்
சடைதெரியப் பார்த்தருளிப்
புண்டரிகத் திருக்கண்ணீர்
பொழிந்திழியப் புரவலனார்.
[34]
முரசுடைத்திண் படைகொடுபோய்
முதலமைச்சர் முனைமுருக்கி
உரைசிறக்கும் புகழ்வென்றி
ஒன்றொழிய வொன்றாமல்
திரைசரித்த கடலுலகில்
திருநீற்றி நெறிபுரந்தியான்
அரசளித்த படிசால
அழகிதென அழிந்தயர்வார்.
[35]
தார்தாங்கிக் கடன்முடித்த
சடைதாங்குந் திருமுடியார்
நீர்தாங்குஞ் சடைப்பெருமான்
நெறிதாங்கண் டவரானார்
சீர்தாங்கும் இவர்வேணிச்
சிரந்தாங்கி வரக்கண்டும்
பார் தாங்க இருந்தேனோ
பழிதாங்கு வேன்என்றார்.
[36]
என்றருளிச் செய்தருளி
இதற்கிசையும் படிதுணிவார்
நின்றநெறி யமைச்சர்க்கு
நீள்நிலங்காத் தரசளித்து
மன்றில்நடம் புரிவார்தம்
வழித்தொண்டின் வழிநிற்ப
வென்றிமுடி என்குமரன்
தனைப்புனைவீர் எனவிதித்தார்.
[37]
அம்மாற்றங் கேட்டழியும்
அமைச்சரையும் இடரகற்றிக்
கைம்மாற்றுஞ் செயல்தாமே
கடனாற்றுங் கருத்துடையார்
செம்மார்க்கந் தலைநின்று
செந்தீமுன் வளர்ப்பித்துப்
பொய்ம்மாற்றுந் திருநீற்றுப்
புனைகோலத் தினிற்பொலிந்தார்.
[38]
கண்டசடைச் சிரத்தினையோர்
கனகமணிக் கலத்தேந்திக்
கொண்டுதிரு முடிதாங்கிக்
குலவும்எரி வலங்கொள்வார்
அண்டர்பிரான் திருநாமத்
தஞ்செழுத்து மெடுத்தோதி
மண்டுதழற் பிழம்பினிடை
மகிழ்ந்தருளி யுள்புக்கார்.
[39]
புக்கபொழு தலர்மாரி
புவிநிறையப் பொழிந்திழிய
மிக்கபெரு மங்கலதூ
ரியம்விசும்பில் முழக்கெடுப்பச்
செக்கர்நெடுஞ் சடைமுடியார்
சிலம்பலம்பு சேவடியின்
அக்கருணைத் திருநிழற்கீழ்
ஆராமை யமர்ந்திருந்தார்.
[40]
முரசங்கொள் கடற்றானை
மூவேந்தர் தங்களின்முன்
பிரசங்கொள் நறுந்தொடையல்
புகழ்ச்சோழர் பெருமையினைப்
பரசுங்குற் றேவலினால்
அவர்பாதம் பணிந்தேத்தி
நரசிங்க முனையர்திறம்
நாமறிந்த படியுரைப்பாம்.
[41]

Back to Top
சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
12.420   நரசிங்க முனையரைய நாயனார்  
பண் -   (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
கோடாத நெறிவிளங்கும்
குடிமரபின் அரசளித்து
மாடாக மணிகண்டர்
திருநீறே மனங்கொள்வார்
தேடாத பெருவளத்தில்
சிறந்ததிரு முனைப்பாடி
நாடாளும் காவலனார்
நரசிங்க முனையரையர்.
[1]
இம்முனையர் பெருந்தகையார்
இருந்தரசு புரந்துபோய்த்
தெம்முனைகள் பலகடந்து
தீங்குநெறிப் பாங்ககல
மும்முனைநீள் இலைச்சூல
முதற்படையார் தொண்டுபுரி
அம்முனைவர் அடியடைவே
அரும்பெரும்பேறு எனஅடைவார்.
[2]
சினவிடையார் கோயில்தொறும்
திருச்செல்வம் பெருக்குநெறி
அனவிடையார் உயிர்துறக்க
வருமெனினும் அவைகாத்து
மனவிடையா மைத்தொடையல்
அணிமார்பர் வழித்தொண்டு
கனவிடையா கிலும்வழுவாக்
கடனாற்றிச் செல்கின்றார்.
[3]
ஆறணிந்த சடைமுடியார்க்
காதிரைநாள் தொறும்என்றும்
வேறுநிறை வழிபாடு
விளங்கியபூ சனைமேவி
நீறணியும் தொண்டர்அணைந்
தார்க்கெல்லாம் நிகழ்பசும்பொன்
நூறுகுறை யாமல்அளித்
தின்னமுதும் நுகர்விப்பார்.
[4]
ஆனசெயல் முறைபுரிவார்
ஒருதிருவா திரைநாளில்
மேன்மைநெறித் தொண்டர்க்கு
விளங்கியபொன் னிடும்பொழுதில்
மானநிலை யழிதன்மை
வருங்காமக் குறிமலர்ந்த
ஊனநிகழ் மேனியராய்
ஒருவர்நீ றணிந்தணைந்தார்.
[5]
மற்றவர்தம் வடிவிருந்த
படிகண்டு மருங்குள்ளார்
உற்றகஇழ்ச் சியராகி
ஒதுங்குவார் தமைக்கண்டு
கொற்றவனார் எதிர்சென்று
கைகுவித்துக் கொடுபோந்தப்
பெற்றியினார் தமைமிகவுங்
கொண்டாடிப் பேணுவார்.
[6]
சீலமில ரேயெனினும்
திருநீறு சேர்ந்தாரை
ஞாலம்இகழ்ந் தருநரகம்
நண்ணாமல் எண்ணுவார்
பாலணைந்தார் தமக்களித்த
படியிரட்டிப் பொன்கொடுத்து
மேலவரைத் தொழுதினிய
மொழிவிளம்பி விடைகொடுத்தார்.
[7]
இவ்வகையே திருத்தொண்டின்
அருமைநெறி எந்நாளும்
செவ்வியஅன் பினல்ஆற்றித்
திருந்தியசிந் தையராகிப்
பைவளர்வாள் அரவணிந்தார்
பாதமலர் நிழல்சேர்ந்து
மெய்வகைய வழியன்பின்
மீளாத நிலைபெற்றார்.
[8]
விடநாகம் அணிந்தபிரான்
மெய்த்தொண்டு விளைந்தநிலை
உடனாகும் நரசிங்க
முனையர்பிரான் கழலேத்தித்
தடநாக மதஞ்சொரியத்
தனஞ்சொரியுங் கலஞ்சேரும்
கடல்நாகை அதிபத்தர்
கடல்நாகைக் கவினுரைப்பாம்.
[9]

Back to Top
சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
12.430   அதிபத்த நாயனார் புராணம்  
பண் -   (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
மன்னி நீடிய செங்கதி
ரவன்வழி மரபில்
தொன்மை யாம்முதற் சோழர்தந்
திருக்குலத் துரிமைப்
பொன்னி நாடெனுங் கற்பகப்
பூங்கொடி மலர்போல்
நன்மை சான்றது நாகைப்பட்
டினத்திரு நகரம்.
[1]
தாம நித்திலக் கோவைகள்
சரிந்திடச் சரிந்த
தேம லர்க்குழல் மாதர்பந்
தாடுதெற் றிகள்சூழ்
காமர் பொற்சுடர் மாளிகைக்
கருங்கடல் முகந்த
மாமு கிற்குலம் மலையென
ஏறுவ மருங்கு.
[2]
பெருமை யில்செறி பேரொலி
பிறங்கலின் நிறைந்து
திரும கட்குவாழ் சேர்விட
மாதலின் யாவும்
தருத லில்கடல் தன்னினும்
பெரிதெனத் திரைபோல்
கரிப ரித்தொகை மணிதுகில்
சொரிவதாங் கலத்தால்.
[3]
நீடு தொல்புகழ் நிலம்பதி
னெட்டினும் நிறைந்த
பீடு தங்கிய பலபொருள்
மாந்தர்கள் பெருகிக்
கோடி நீள்தனக் குடியுடன்
குவலயங் காணும்
ஆடி மண்டலம் போல்வதவ்
வணிகிளர் மூதூர்.
[4]
அந்நெ டுந்திரு நகர்மருங்
கலைகடல் விளிம்பில்
பன்னெ டுந்திரை நுரைதவழ்
பாங்கரின் ஞாங்கர்
மன்னு தொன்மையின் வலைவளத்
துணவினில் மலிந்த
தன்மை வாழ்குடி மிடைந்தது
தடநுளைப் பாடி.
[5]
புயல ளப்பில வெனவலை
புறம்பணை குரம்பை
அயல ளப்பன மீன்விலைப்
பசும்பொனி னடுக்கல்
வியல ளக்கரில் விடுந்திமில்
வாழ்நர்கள் கொணர்ந்த
கயல ளப்பன பரத்தியர்
கருநெடுங் கண்கள்.
[6]
உணங்கல் மீன்கவர் வுறுநசைக்
குருகுடன் அணைந்த
கணங்கொள் ஓதிமங் கருஞ்சினைப்
புன்னையங் கானல்
அணங்கு நுண்ணிடை நுளைச்சியர்
அணிநடைக் கழிந்து
மணங்கொள் கொம்பரின் மருங்குநின்று
இழியல மருளும்.
[7]
வலைநெ டுந்தொடர் வடம்புடை
வலிப்பவர் ஒலியும்
விலைப கர்ந்துமீன் குவைகொடுப்
பவர்விளி ஒலியும்
தலைசி றந்தவெள் வளைசொரி
பவர்தழங் கொலியும்
அலைநெ டுங்கடல் அதிரொலிக்
கெதிரொலி யனைய.
[8]
அனைய தாகிய அந்நுளைப்
பாடியில் அமர்ந்து
மனைவ ளம்பொலி நுளையர்தங்
குலத்தினில் வந்தார்
புனையி ளம்பிறை முடியவர்
அடித்தொண்டு புரியும்
வினைவி ளங்கிய அதிபத்தர்
எனநிகழ் மேலோர்.
[9]
ஆங்கு அன்பர்தாம் நுளையர்தந்
தலைவராய் அவர்கள்
ஏங்கு தெண்டிரைக் கடலிடைப்
பலபட இயக்கிப்
பாங்கு சூழ்வலை வளைத்துமீன்
படுத்துமுன் குவிக்கும்
ஓங்கு பல்குவை யுலப்பில
வுடையராய் உயர்வார்.
[10]
முட்டில் மீன்கொலைத் தொழில்வளத்
தவர்வலை முகந்து
பட்ட மீன்களில் ஒருதலை
மீன்படுந் தோறும்
நட்ட மாடிய நம்பருக்
கெனநளிர் முந்நீர்
விட்டு வந்தனர் விடாதஅன்
புடன்என்றும் விருப்பால்.
[11]
வாகு சேர்வலை நாள்ஒன்றில்
மீனொன்று வரினும்
ஏக நாயகர் தங்கழற்
கெனவிடும் இயல்பால்
ஆகு நாள்களில் அனேகநாள்
அடுத்தொரு மீனே
மேக நீர்படி வேலையில்
படவிட்டு வந்தார்.
[12]
மீன்வி லைப்பெரு குணவினில்
மிகுபெருஞ் செல்வம்
தான்ம றுத்தலின் உணவின்றி
அருங்கிளை சாம்பும்
பான்மை பற்றியும் வருந்திலர்
பட்டமீன் ஒன்று
மான்ம றிக்கரத் தவர்கழற்
கெனவிட்டு மகிழ்ந்தார்.
[13]
சால நாள்கள்இப் படிவரத்
தாம்உண வயர்த்துக்
கோல மேனியுந் தளரவுந்
தந்தொழில் குறையாச்
சீல மேதலை நின்றவர்
தந்திறந் தெரிந்தே
ஆல முண்டவர் தொண்டர்அன்
பெனும்அமு துண்பார்.
[14]
ஆன நாள்ஒன்றில் அவ்வொரு
மீனுமங் கொழித்துத்
தூநி றப்பசுங் கனகநற்
சுடர்நவ மணியால்
மீனு றுப்புற அமைத்துல
கடங்கலும் விலையாம்
பான்மை அற்புதப் படியதொன்
றிடுவலைப் படுத்தார்.
[15]
வாங்கு நீள்வலை அலைகடற்
கரையில்வந் தேற
ஓங்கு செஞ்சுடர் உதித்தென
வுலகெலாம் வியப்பத்
தாங்கு பேரொளி தழைத்திடக்
காண்டலும் எடுத்துப்
பாங்கு நின்றவர் மீன்ஒன்று
படுத்தனம் என்றார்.
[16]
என்று மற்றுளோர் இயம்பவும்
ஏறுசீர்த் தொண்டர்
பொன் திரட்சுடர் நவமணி
பொலிந்தமீ னுறுப்பால்
ஒன்று மற்றிது என்னையா
ளுடையவர்க் காகும்
சென்று பொற்கழல் சேர்கெனத்
திரையொடுந் திரித்தார்.
[17]
அகில லோகமும் பொருள்முதற்
றாம்எனும் அளவில்
புகலு மப்பெரும் பற்றினைப்
புரையற எறிந்த
இகலில் மெய்த்திருத் தொண்டர்முன்
இறைவர்தாம் விடைமேல்
முகில்வி சும்பிடை யணைந்தனர்
பொழிந்தனர் முகைப்பூ.
[18]
பஞ்ச நாதமும் எழுந்தன
அதிபத்தர் பணிந்தே
அஞ்ச லிக்கரம் சிரமிசை
யணைத்துநின் றவரை
நஞ்சு வாண்மணி மிடற்றவர்
சிவலோகம் நண்ணித்
தஞ்சி றப்புடை அடியர்பாங்
குறத்தலை யளித்தார்.
[19]
தம்ம றம்புரி மரபினில்
தகும்பெருந் தொண்டு
மெய்ம்மை யேபுரி அதிபத்தர்
விளங்குதாள் வணங்கி
மும்மை யாகிய புவனங்கள்
முறைமையிற் போற்றும்
செம்மை நீதியார் கலிக்கம்பர்
திருத்தொண்டு பகர்வாம்.
[20]

Back to Top
சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
12.440   கலிக்கம்ப நாயனார் புராணம்  
பண் -   (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
உரிமை யொழுக்கந் தலைநின்ற
வுயர்தொல் மரபின் நீடுமனைத்
தரும நெறியால் வாழ்குடிகள்
தழைத்து வளருந் தன்மையதாய்
வரும்மஞ் சுறையும் மலர்ச்சோலை
மருங்கு சூழ்ந்த வளம்புறவில்
பெருமை யுலகு பெறவிளங்கும்
மேல்பால் பெண்ணா கடமூதூர்.
[1]
மற்றப் பதியின் இடைவாழும்
வணிகர் குலத்து வந்துதித்தார்
கற்றைச் சடையார் கழற்காத
லுடனே வளர்ந்த கருத்துடையார்
அற்றைக் கன்று தூங்கானை
மாடத்து அமர்ந்தார் அடித்தொண்டு
பற்றிப் பணிசெய் கலிக்கம்பர்
என்பார் மற்றோர் பற்றில்லார்.
[2]
ஆன அன்பர் தாம்என்றும்
அரனார் அன்பர்க் கமுதுசெய
மேன்மை விளங்கு போனகமும்
விரும்பு கறிநெய் தயிர்தீம்பால்
தேனின் இனிய கனிகட்டி
திருந்த அமுது செய்வித்தே
ஏனை நிதியம் வேண்டுவன
எல்லாம் இன்ப முறவளிப்பார்.
[3]
அன்ன வகையால் திருத்தொண்டு
புரியும் நாளில் அங்கொருநாள்
மன்னு மனையில் அமுதுசெய
வந்த தொண்டர் தமையெல்லாம்
தொன்மை முறையே அமுதுசெயத்
தொடங்கு விப்பார் அவர்தம்மை
முன்னர் அழைத்துத் திருவடிகள்
எல்லாம் விளக்க முயல்கின்றார்.
[4]
திருந்து மனையார் மனையெல்லாம்
திகழ விளக்கிப் போனகமும்
பொருந்து சுவையில் கறியமுதும்
புனிதத் தண்ணீ ருடன்மற்றும்
அருந்தும் இயல்பில் உள்ளனவும்
அமைத்துக் கரக நீரளிக்க
விரும்பு கணவர் பெருந்தவர்தாள்
எல்லாம் விளக்கும் பொழுதின்கண்.
[5]
முன்பு தமக்குத் தொழில்செய்யும்
தமராய் ஏவல் முனிந்துபோய்
என்பும் அரவும் அணிந்தபிரான்
அடியா ராகி அங்கெய்தும்
அன்ப ருடனே திருவேடந்
தாங்கி யணைந்தா ரொருவர்தாம்
பின்பு வந்து தோன்றஅவர்
பாதம் விளக்கும் பெருந்தகையார்.
[6]
கையால் அவர்தம் அடிபிடிக்கக்
காதல் மனையார் முன்பேவல்
செய்யா தகன்ற தமர்போலும்
என்று தேரும் பொழுதுமலர்
மொய்யார் வாசக் கரகநீர்
வார்க்க முட்ட முதல்தொண்டர்
மையார் கூந்தல் மனையாரைப்
பார்த்து மனத்துட் கருதுவார்.
[7]
வெறித்த கொன்றை முடியார்தம்
அடியார் இவர்முன் மேவுநிலை
குறித்து வெள்கி நீர்வாரா
தொழிந்தாள் என்று மனங்கொண்டு
மறித்து நோக்கார் வடிவாளை
வாங்கிக் கரகம் வாங்கிக்கை
தறித்துக் கரக நீரெடுத்துத்
தாமே அவர்தாள் விளக்கினார்.
[8]
விளக்கி அமுது செய்வதற்கு
வேண்டு வனதா மேசெய்து
துளக்கில் சிந்தை யுடன்தொண்டர்
தம்மை அமுது செய்வித்தார்
அளப்பில் பெருமை யவர்பின்னு
மடுத்த தொண்டின் வழிநின்று
களத்தி னஞ்ச மணிந்தவர்தா
ணிழற்கீ ழடியா ருடன்கலந்தார்.
[9]
ஓத மலிநீர் விடமுண்டார்
அடியார் வேடம் என்றுணரா
மாத ரார்கை தடிந்தகலிக்
கம்பர் மலர்ச்சே வடிவணங்கிப்
பூத நாதர் திருத்தொண்டு
புரிந்து புவனங் களிற்பொலிந்த
காதல் அன்பர் கலிநீதி
யார்தம் பெருமை கட்டுரைப்பாம்.
[10]

Back to Top
சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
12.450   கலிய நாயனார் புராணம்  
பண் -   (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
பேருலகில் ஓங்குபுகழ்ப்
பெருந்தொண்டை நன்னாட்டு
நீருலவுஞ் சடைக்கற்றை
நிருத்தர்திருப் பதியாகும்
காருலவு மலர்ச்சோலைக்
கன்னிமதில் புடைசூழ்ந்து
தேருலவு நெடுவீதி
சிறந்ததிரு வொற்றியூர்.
[1]
பீடுகெழு பெருந்தெருவும்
புத்தருடன் பீலிஅமண்
வேடமுடை யவர்பொருள்போல்
ஆகாச வெளிமறைக்கும்
ஆடிகொடி மணிநெடுமா
ளிகைநிரைகள் அலைகமுகின்
காடனைய கடல்படப்பை
யெனவிளங்குங் கவின்காட்டும்.
[2]
பன்னுதிருப் பதிகஇசைப்
பாட்டுஓவா மண்டபங்கள்
அன்னநடை மடவார்கள்
ஆட்டு ஓவா அணியரங்கு
பன்முறைதூ ரியமுழங்கும்
விழவுஓவா பயில்வீதி
செந்நெல்லடி சிற்பிறங்கல்
உணவுஓவா திருமடங்கள்.
[3]
கெழுமலர்மா தவிபுன்னை
கிளைஞாழல் தளையவிழும்
கொழுமுகைய சண்பகங்கள்
குளிர்செருந்தி வளர்கைதை
முழுமணமே முந்நீரும்
கமழமலர் முருகுயிர்க்கும்
செழுநிலவின் துகளனைய
மணற்பரப்புந் திருப்பரப்பு.
[4]
எயிலணையும் முகில்முழக்கும்
எறிதிரைவே லையின்முழக்கும்
பயில்தருபல் லியமுழக்கும்
முறைதெரியாப் பதியதனுள்
வெயில்அணிபல் மணிமுதலாம்
விழுப்பொருளா வனவிளக்கும்
தயிலவினைத் தொழின்மரபில்
சக்கரப்பா டித்தெருவு.
[5]
அக்குலத்தின் செய்தவத்தால்
அவனிமிசை அவதரித்தார்
மிக்கபெருஞ் செல்வத்து
மீக்கூர விளங்கினார்
தக்கபுகழ்க் கலியனார்
எனும்நாமந் தலைநின்றார்
முக்கண்இறை வர்க்குஉரிமைத்
திருத்தொண்டின் நெறிமுயல்வார்.
[6]
எல்லையில்பல் கோடிதனத்
திறைவராய் இப்படித்தாம்
செல்வநெறிப் பயனறிந்து
திருவொற்றி யூரமர்ந்த
கொல்லைமழ விடையார்தம்
கோயிலின்உள் ளும்புறம்பும்
அல்லும்நெடும் பகலுமிடும்
திருவிளக்கின் அணிவிளைத்தார்.
[7]
எண்ணில்திரு விளக்குநெடு
நாளெல்லாம் எரித்துவரப்
புண்ணியமெய்த் தொண்டர்செயல்
புலப்படுப்பார் அருளாலே
உண்ணிறையும் பெருஞ்செல்வம்
உயர்த்தும்வினைச் செயல்ஓவி
மண்ணிலவர் இருவினைபோல்
மாண்டதுமாட் சிமைத்தாக.
[8]
திருமலிசெல் வத்துழனி
தேய்ந்தழிந்த பின்னையுந்தம்
பெருமைநிலைத் திருப்பணியில்
பேராத பேராளர்
வருமரபில் உள்ளோர்பால்
எண்ணெய்மா றிக்கொணர்ந்து
தருமியல்பில் கூலியினால்
தமதுதிருப் பணிசெய்வார்.
[9]
வளமுடையார் பால்எண்ணெய்
கொடுபோய்மா றிக்கூலி
கொளமுயலும் செய்கையும்மற்
றவர்கொடா மையின்மாறத்
தளருமனம் உடையவர்தாம்
சக்கரஎந் திரம்புரியும்
களனில்வரும் பணிசெய்து
பெறுங்கூலி காதலித்தார்.
[10]
செக்குநிறை எள்ளாட்டிப்
பதமறிந்து திலதயிலம்
பக்கமெழ மிகவுழந்தும்
பாண்டில்வரும் எருதுய்த்தும்
தக்கதொழிற் பெறுங்கூலி
தாங்கொண்டு தாழாமை
மிக்கதிரு விளக்கிட்டார்
விழுத்தொண்டு விளக்கிட்டார்.
[11]
அப்பணியால் வரும்பேறும்
அவ்வினைஞர் பலருளராய்
எப்பரிசுங் கிடையாத
வகைமுட்ட இடருழந்தே
ஒப்பில்மனை விற்றெரிக்கு
முறுபொருளும் மாண்டதற்பின்
செப்பருஞ்சீர் மனையாரை
விற்பதற்குத் தேடுவார்.
[12]
மனமகிழ்ந்து மனைவியார்
தமைக்கொண்டு வளநகரில்
தனமளிப்பார் தமையெங்கும்
கிடையாமல் தளர்வெய்திச்
சினவிடையார் திருக்கோயில்
திருவிளக்குப் பணிமுட்டக்
கனவினும்முன் பறியாதார்
கையறவால் எய்தினார்.
[13]
பணிகொள்ளும் படம்பக்க
நாயகர்தங் கோயிலினுள்
அணிகொள்ளுந் திருவிளக்குப்
பணிமாறும் அமையத்தில்
மணிவண்ணச் சுடர்விளக்கு
மாளில்யான் மாள்வனெனத்
துணிவுள்ளங் கொளநினைந்தவ்
வினைமுடிக்கத் தொடங்குவார்.
[14]
திருவிளக்குத் திரியிட்டங்கு
அகல்பரப்பிச் செயல்நிரம்ப
ஒருவியஎண் ணெய்க்குஈடா
உடல்உதிரங் கொடுநிறைக்கக்
கருவியினால் மிடறரிய
அக்கையைக் கண்ணுதலார்
பெருகுதிருக் கருணையுடன்
நேர்வந்து பிடித்தருளி.
[15]
மற்றவர்தம் முன்னாக
மழவிடைமேல் எழுந்தருள
உற்றவூ றதுநீங்கி
ஒளிவிளங்க வுச்சியின்மேல்
பற்றியஞ் சலியினராய்
நின்றவரைப் பரமர்தாம்
பொற்புடைய சிவபுரியில்
பொலிந்திருக்க அருள்புரிந்தார்.
[16]
தேவர்பிரான் திருவிளக்குச்
செயல்முட்ட மிடறரிந்து
மேவரிய வினைமுடித்தார்
கழல்வணங்கி வியனுலகில்
யாவரெனாது அரனடியார்
தமையிகழ்ந்து பேசினரை
நாவரியுஞ் சத்தியார்
திருத்தொண்டின் நலமுரைப்பாம்.
[17]

Back to Top
சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
12.460   சத்தி நாயனார் புராணம்  
பண் -   (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
களமர் கட்ட கமலம் பொழிந்ததேன்
குளநி றைப்பது கோலொன்றில் எண்திசை
அளவும் ஆணைச் சயத்தம்பம் நாட்டிய
வளவர் காவிரி நாட்டு வரிஞ்சையூர்.
[1]
வரிஞ்சை யூரினில் வாய்மைவே ளாண்குலம்
பெருஞ்சி றப்புப் பெறப்பிறப்பு எய்தினார்
விரிஞ்சன் மால்முதல் விண்ணவர் எண்ணவும்
அருஞ்சி லம்பணி சேவடிக் காட்செய்வார்.
[2]
அத்த ராகிய வங்கணர் அன்பரை
இத்த லத்தில் இகழ்ந்தியம் பும்முரை
வைத்த நாவை வலித்தரி சத்தியால்
சத்தி யார்எனும் நாமந் தரித்துளார்.
[3]
தீங்கு சொற்ற திருவிலர் நாவினை
வாங்க வாங்குதண் டாயத்தி னால்வலித்
தாங்க யிற்கத்தி யால்அரிந் தன்புடன்
ஓங்கு சீர்த்திருத் தொண்டின் உயர்ந்தனர்.
[4]
அன்ன தாகிய ஆண்மைத் திருப்பணி
மன்னு பேரு லகத்தில் வலியுடன்
பன்னெ டும்பெரு நாள்பரி வால்செய்து
சென்னி யாற்றினர் செந்நெறி யாற்றினர்.
[5]
ஐய மின்றி யரிய திருப்பணி
மெய்யி னாற்செய்த வீரத் திருத்தொண்டர்
வைய்யம் உய்ய மணிமன்று ளாடுவார்
செய்ய பாதத் திருநிழல் சேர்ந்தனர்.
[6]
நாய னார்தொண் டரைநலங் கூறலார்
சாய நாவரி சத்தியார் தாள்பணிந்து
ஆய மாதவத் தையடி கள்ளெனும்
தூய காடவர் தந்திறஞ் சொல்லுவாம்.
[7]

Back to Top
சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
12.470   ஐயடிகள் காடவர்கோன் நாயனார்  
பண் -   (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
வையம்நிகழ் பல்லவர்தம்
குலமரபின் வழித்தோன்றி
வெய்யகலி யும்பகையும்
மிகையொழியும் வகையடக்கிச்
செய்யசடை யார்சைவத்
திருநெறியால் அரசளிப்பார்
ஐயடிகள் நீதியால்
அடிப்படுத்துஞ் செங்கோலார்.
[1]
திருமலியும் புகழ்விளங்கச்
சேணிலத்தில் எவ்வுயிரும்
பெருமையுடன் இனிதுஅமரப்
பிறபுலங்கள் அடிப்படுத்துத்
தருமநெறி தழைத்தோங்கத்
தாரணிமேற் சைவமுடன்
அருமறையின் துறைவிளங்க
அரசளிக்கும் அந்நாளில்.
[2]
மன்னவரும் பணிசெய்ய
வடநூல்தென் தமிழ்முதலாம்
பன்னுகலை பணிசெய்யப்
பார்அளிப்பார் அரசாட்சி
இன்னல்என இகழ்ந்ததனை
எழிற்குமரன் மேல்இழிச்சி
நன்மைநெறித் திருத்தொண்டு
நயந்தளிப்பார் ஆயினார்.
[3]
தொண்டுரிமை புரக்கின்றார்
சூழ்வேலை யுலகின்கண்
அண்டர்பிரான் அமர்ந்தருளும்
ஆலயங்க ளானவெலாம்
கண்டிறைஞ்சித் திருத்தொண்டின்
கடனேற்ற பணிசெய்தே
வண்தமிழின் மொழிவெண்பா
ஓர்ஒன்றா வழுத்துவார்.
[4]
பெருத்தெழுகா தலில்வணங்கிப்
பெரும்பற்றத் தண்புலியூர்த்
திருச்சிற்றம் பலத்தாடல்
புரிந்தருளுஞ் செய்யசடை
நிருத்தனார் திருக்கூத்து
நேர்ந்திறைஞ்சி நெடுந்தகையார்
விருப்பினுடன் செந்தமிழின்
வெண்பாமென் மலர்புனைந்தார்.
[5]
அவ்வகையால் அருள்பெற்றங்கு
அமர்ந்துசில நாள்வைகி
இவ்வுலகில் தம்பெருமான்
கோயில்களெல் லாம்எய்திச்
செவ்வியஅன் பொடுபணிந்து
திருப்பணிஏற் றனசெய்தே
எவ்வுலகும் புகழ்ந்தேத்தும்
இன்தமிழ்வெண் பாமொழிந்தார்.
[6]
இந்நெறியால் அரனடியார்
இன்பமுற இசைந்தபணி
பன்னெடுநாள் ஆற்றியபின்
பரமர்திரு வடிநிழற்கீழ்
மன்னுசிவ லோகத்து
வழியன்பர் மருங்கணைந்தார்
கன்னிமதில் சூழ்காஞ்சிக்
காடவர் ஐடிகளார்.
[7]
பையரவ மணியாரம்
அணிந்தார்க்குப் பாவணிந்த
ஐயடிகள் காடவனார்
அடியிணைத்தா மரைவணங்கிக்
கையணிமான் மழுவுடையார்
கழல்பணிசிந் தனையுடைய
செய்தவத்துக் கணம்புல்லர்
திருத்தொண்டு விரித்துரைப்பாம்.
[8]
உளத்திலொரு துளக்கம் இலோம்
உலகுய்ய இருண்ட திருக்
களத்து முது குன்றர்தரு
கனகம் ஆற்றினிலிட்டு
வளத்தின் மலிந்தேழ் உலகும்
வணங்குபெருந் திருவாரூர்க்
குளத்தில்எடுத் தார்வினையின்
குழிவாய்நின்று எனையெடுத்தார்.
[9]

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai nool